வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23ம் ஆண்டு விழா சென்ற
ஆண்டு 2010 ஜூலை 3,4,5 தேதிகளில் கனெக்டிகட் மாநிலம்
வாட்டர்பரியில் நடைபெற்றது நீங்கள் அறிந்ததே. ஒவ்வொரு ஆண்டும்
விழாவை சிறப்பாக நடத்தும் உள்ளூர் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்காக,
விழாவின் நிகர லாபத்தில் 25% தொகை வழங்கப்படுவது பலருக்கும்
தெரிந்திருக்கலாம். அதே போல் சென்ற ஆண்டிற்கான தொகையை
கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்திற்கு தருவதென்று பேரவை தீர்மானித்தது.
சென்ற ஆண்டின் வரவு செலவினை சரிபார்த்து முடிக்கும் பணி மார்ச்
மாதத்தில் முடிவடைந்து, மேற்சொன்ன 25% தொகை $8,900 என
தீர்மானிக்கப்பட்டது. அந்த சமயத்தில் கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின்
சித்திரை திருவிழா வந்ததால் (ஏப்ரல் 16, 2011), அதே விழாவில்
மேற்சொன்ன தொகையை கொடுத்துவிடலாம் என்றும் பேரவையின்
செயற்குழு முடிவு
செய்தது.
தொகை மிகவும் பெரிதாக இருக்கும்போது, காசோலை மட்டும்
சிறியதாக இருக்கவேண்டுமா என்றெண்ணிய தலைவர் திரு.பழனி
சுந்தரம், அளவில் பெரியதாக ஒரு 'மாதிரி-காசோலையை'
செய்வித்தார். சித்திரைத் திருவிழா நடக்கும் அரங்கின் வாயிலில் அந்த
'மாதிரி-காசோலையை' மக்களின் பார்வைக்கும் வைத்திருந்தார்.
சென்ற ஆண்டு விழாவின் வெற்றிக்காக, பொருளுதவி மற்றும் அயராத
உடல் உழைப்பை அளித்த தன்னார்வலர்களை கண்டிப்பாக
சித்திரைத் திருவிழாவிற்கு வரவேண்டும் என்ற தலைவரின் அழைப்பை
ஏற்று, பல தன்னார்வலர்கள் வந்திருந்தனர். சித்திரைத் விழா இனிதாக
துவங்கியது. பேரவைக்கு அளிக்கப்பட்ட அந்த நேரமும் வந்தது.
பெரிய மாதிரி-காசோலையுடன் மேடையேறினார் தலைவர். அனைத்து
தன்னார்வலர்களின் பெயரையும் வாசித்து அவர்களை மேடைக்கு
வருமாறு அழைத்து, மக்களுக்கு அறிமுகம் செய்து, அவர்களை
மீண்டும் ஒரு முறை பாராட்டவும் செய்தார். பின்னர், கனெக்டிகட்
தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திருமதி. உமா சங்கரிடம், அந்த
பெரிய மாதிரி-காசோலையை வழங்கி, மறக்காமல் $8,900க்கான
'உண்மையான' காசோலையும் வழங்கினார். தங்கள் பொருள்,
நேரம் அனைத்தும் கொடுத்து, குடும்பம், அலுவலகம் இவற்றையும்
சமாளித்து, மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பாடுபட்ட
தன்னார்வலர்கள், தங்கள் உழைப்பின் பலனை தங்கள் உள்ளூர்
தமிழ்ச் சங்கமும் பெறுவதை பார்ப்பதைவிட பெருமையும்,
ஆனந்தமும் வேறென்ன இருக்க முடியும்?
